வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனின் ஆறாம் சார்ந்த வாழ்க்கை வரலாற்றின் ஒரு மாய கற்பனை

1

 தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்த, கிராமம் என்றும் இல்லாமல், நகரம் என்றும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் ஒரு ஊரின் ஆளரவமற்ற சாலை ஒன்றில் வேகமாக பைக்கை ஒட்டியபடி ஆர்சீ என்ற இளைஞன், பைக்கின் பின்னால் அமர்ந்து வரும் கேஸோ என்ற தனது நண்பனிடம் உரக்க பேசினான்.

“ கேஸோ.. டிஸ்டன்ஸ் எப்படி இருக்குது?”

“ ஆர்சீ.. டிஸ்டன்ஸ் வைட் ஆகிட்டேதான் வருது. ஃபயர் மச்சான்.. இன்னும் அடிச்சி ஓட்டு ”

லைசென்ஸ் எடுக்க தகுதியான வயதை இன்னும் எட்டாத அவர்கள், வண்டியை ஓட்டுவதே தவறு. அதுக்கும் மேலாக அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு பைக்கை ஓட்டி வந்தபோது சாலை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது மாட்டிக்கொண்டனர் . அந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தவண்ணம் பைக்கை முறுக்கி பறந்து ஓடினர். கடுப்பான போலீசார் தங்கள் ஜீப்பை உயிர்ப்பித்து அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

பணக்கார பைக்கின் துரித வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அரசாங்க போலீஸ் ஜீப் பைக்கை நெருங்க முடியாமல் பின்தங்கியது. பைக்குக்கும் ஜீப்புக்கும் இடையே இடைவெளி அதிகமாவதை குறித்து இளைஞர்கள் இருவரும் குஷியாகி மேலும் வேகம் அதிகரித்தனர்.

“ ஆர்சீ.. சூப்பர்டா.. மாம்ஸுங்க நம்ம வண்டியை நெருங்க கூட முடியாது..”

சாலையில் நேராக சென்றுகொண்டிருந்த பைக்கை அடுத்து வந்த வலப்பக்க தெருவில் திருப்பினான் ஆர்சீ.

போலீஸ் ஜீப்பும் நிற்காமல் அவர்களை பிடிக்க வந்த வண்ணம் இருந்தது. 

வலப்பக்கம் திரும்பியதும் சாலையின் பரப்பில் காணப்பட்ட குண்டு குழிகளை ஆர்சீ எதிர்பார்க்கவில்லை..அவன் சீறிக்கொண்டு வந்த வேகத்தை நொடியில் குறைக்க இயலாமல் தடுமாற.. அதே நேரம் ஒரு குழிக்குள் இறங்கிய முன் சக்கரம் ஒரு அதிர்ச்சியை பைக்கின் மீது படர்த்த, ஆர்சீயும் கேஸோவும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். பைக் ஒரு குலுங்கு குலுங்கி திமிர, அவர்கள் இருவரும் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டனர் . பைக் வேகமாக சறுக்கி, பக்கவாட்டில் இருந்த சரிவில் சரசரவென்று வழுக்கி இறங்கியது.

அந்நேரத்துக்கு எல்லாம் போலீஸ் ஜீப் மெயின் ரோட்டில் இருந்து அந்த வலது பக்க சாலையில் திரும்பி இருந்தது. போலீசார் ஒருவாறாக சூழ்நிலையை யூகித்து ஜீப்பின் வேகத்தை குறைத்தனர்.

கேஸோவும் ஆர்சீயும் தற்சமயம் போலீசாரின் என்ட்ரியை பார்த்துவிட்டு, இருட்டில் மறைய முன்றனர். பைக் சறுக்கிய பக்கத்துக்கு எதிர்வாட்டில் இருந்த சரிவில் மெதுவாக, சத்தம் கேக்காத வகையில் இறங்கினர். அந்த சரிவின் முடிவில் இருந்த அடர்ந்த மரக்கூட்டத்தில் நுழைந்தனர். ஒரு மினி காடு போன்ற தோற்றம் அளித்த அந்த பகுதி அச்சமயம் அவர்களுக்கு மறைந்து இருக்க சாதகமாக இருந்தது.

போலீஸ் ஜீப் மெதுவாக அந்த ரோட்டில் வந்தது. பைக் தடம் புரண்ட இடத்தை அடைந்து நின்றது.

கையில் டார்ச்சுடன் கான்ஸ்டபிள் ஜீப்பில் இருந்து இரங்கி சாலையின் இரு பக்கமும் பார்த்தார். சப் இன்ஸ்பெக்டரும் ஜீப்பில் இருந்து இறங்கி வந்தார்.

“ சார்.. இங்கேதான் வண்டி புரண்டது. பக்கத்துலதான் இருப்பானுங்க பொடியனுங்க..”

ஆர்சீயும் கேஸோவும் போலீஸ் தேடலில் சிக்கிவிடாமல் இருக்க சரியான ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து நின்றனர்.

போலீசார் இருவரும் சாலையின் பக்கவாட்டில் சரிவில் பார்க்க அங்கே மல்லாக்க கவிழ்ந்த நிலையில் அந்த பைக்கை கண்டனர்.

“ கான்ஸ்டபிள்.. அது நாம பாலோ பண்ண பைக் தானே?”

“ அதேதான் சார்.. இந்த பேட்ஹோல்ல பவுன்ஸ் ஆகி வண்டி விழுந்திருக்கு சார்”

“ சரிதான்யா.. அப்போ பொடியனுங்க இங்கதான் இருப்பாங்க.. தேடலாம் வாங்க. லைசன்ஸ் இல்லாம, அதுவும் தண்ணியடிச்சிட்டு, இவ்வளவு அசால்ட்டா வண்டிய ஒட்டறான்னா அவன் பெரிய இடத்து பையனா இருப்பான். இல்லனா வேற ஏதாவது இல்லீகல் வேலை செய்யறப்போ நம்ம கிட்ட மாட்டாம தப்பி ஓட பாத்து இருக்கான். வாட் எவர் இட் ஈஸ் . நாம அவனுங்களை புடிச்சி உலுக்கி எடுத்தோம்னா சில சுவாரஷ்யமான இனபானர்மேஷன்ஸ் கிடைக்கலாம்.. வாங்க “ என்றவாறு இருவரும் மெதுவாக நடந்த வண்ணம் சாலையில் முன்னேறினர்.

போலீசாரின் நடவடிக்கைகளை தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே பார்த்து வந்தனர் ஆர்சீயும் கேஸோவும்.

“ மச்சீ…. இவங்க நம்மளை புடிச்சிடுவாங்க போல இருக்குதுடா.. அங்கிளுக்கு போன் பண்ணுடா”

கேஸோ துரிதமாக தனது அலைபேசியை உயிர்ப்பித்து ஒரு எண்ணுக்கு அழைத்தான்.

“ டாடி..”

“ கேஸோ .. என்னடா ஆச்சு .. குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“ டாடி.. நாங்க பைக்ல வந்தோம்.. போலீஸ் எங்களை புடிக்க வர்றாங்க.”

“டேய்..டேய்.. ரிலாக்ஸ்.. எங்க இருக்கீங்க? எந்த ஏரியா போலீஸ் உங்களை புடிக்க வராங்க?”

விபரம் சொன்னான்.

“ சரி.. மறைவா இருங்க.. நான் இப்போ சரி பண்ணிடறேன்..” என்றபடி கால் டிஷ்கன்னெக்ட் ஆனது.

போலீசார் சற்று நேரம் சாலையின் இருபக்கமும் தேடி வந்த நிலையில்.. சப் இன்ஸ்பெக்ட்டரின் போன் ரிங் அடித்தது.

அவர் எடுத்து பேசினார்.

மரத்தின் மறைவில் இருந்த ஆர்சீயும் கேஸோவும் சப் இன்ஸ்பெக்டர் போனில் பேசுவதை கண்டனர்.
சில நொடிகளில் சப் இன்ஸ்பெக்டர் போனை கட் செய்தவாறு கான்ஸ்டபிளை நோக்கி பேசினார் ..” கான்ஸ்டபிள்.. விடுங்க..அந்த பசங்களை தேடவேண்டாம். மேலிடத்துல இருந்து போன்..” என்றவாறு ஜீப்பை நோக்கி நடந்தார்.

நிலைமையை புரிந்துகொண்ட ஆர்சீயும் கேஸோவும் அமைதியடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தனர்.

ஜீப் ரிவர்ஸ் எடுத்து வந்த வழியே திரும்பி மிதமான வேகத்தில் சென்று மறைந்தது.

பெருமூச்சுவிட்டவாறு கேஸோவும் ஆர்சீயும் மர மறைவில் இருந்து வெளியேற எத்தனித்த போது மீண்டும் சாலையின் தொலைவில் ஒரு வண்டி வேகமாக வரும் சத்தம் கேட்டது.

இவர்கள் வந்த திசைக்கு எதிர் திசையில் இருந்து ஒரு ஸ்கூட்டி வேகமாக வந்தது. அதனை துரத்தியபடி சற்று தொலைவில் ஒரு கார் விரைவாக வந்தது.

இவர்கள் இருவரும் மீண்டும் மர மறைவில் பதுங்கினர்.

இவர்கள் விழுந்த அதே குழியில் அந்த ஸ்கூட்டியும் தடுமாறி விழ , அந்த ஸ்கூட்டியை ஓட்டியவன் சாலையில் தூக்கி வீசப்பட்டான்.

பின்னால் வந்த கார் சட்டென நின்றது. காரில் இருந்து சிலர் இறங்கினர். வந்தவர்களின் தலைவன் போல இருந்தவன் மற்றவர்களை பார்த்து தலை அசைத்து சிக்னல் தர அனைவரும் காருக்குள் இருந்து சில ஆயுதங்களை எடுத்து வந்தனர்.

ஸ்கூட்டியில் இருந்து சாலையில் விழுந்தவனை நெருங்கினர் அனைவரும்.

கீழே விழுந்தவன், அடிபட்ட வலியில் இருந்து இன்னும் மீளாதவனாக அதிச்சியில் இவர்களை பார்த்தான்.

அந்த கூட்டத்தின் தலைவன் மற்றவர்களுக்கு தலையாட்டி மீண்டும் சிக்னல் தர, அனைவரும் தங்கள் கைகளில் வைத்து இருந்த உருட்டு கட்டைகளால் கீழே விழுந்தவனை தாக்க ஆரம்பித்தனர்.

ஆர்சீயும் கேஸோவும் அதிர்ச்சியில் உறைந்தவாறு நடப்பதை கண்டனர். சற்று நேரத்தில் அந்த கூட்டத்தின் தலைவன் மற்றவர்களை அடிப்பதை நிறுத்த சொன்னான்.

“ முடிஞ்சதுடா.. நிறுத்திடுங்க. நான் அண்ணனுக்கு போன் பண்ணிடறேன்..” என்றவாறு கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு போன் செய்தவாறு அந்த கூட்டத்தை விட்டு சற்று தள்ளியவாறு நடந்தான். சாலையின் சுற்றுமுற்றும் பார்த்தவாறு எச்சரிக்கையுடன் மெதுவாக நடந்தவாறு பேசினான்.

“ அண்ணே .. முடிஞ்சதுன்னே .. ஆள துரத்தி புடிச்சு..” பேசிக்கொண்டே சாலையின் பக்கவாட்டில் பார்த்தவன்.. அங்கே மரத்துக்கு பின்னால் ஆர்சீயும் கேஸோவும் நிற்பதை கண்டுவிட்டான்.

அவன் தங்களை கண்டுவிட்டதை இவர்களும் உணர்ந்துகொண்டனர்.
ஒருவழியாக முடிவெடுத்த மழை , மேகத்தை கிழித்துக்கொண்டு துளித்துளியாக மண்ணை நோக்கி விழ ஆரம்பித்தது.

(தொடரும் )

Leave a comment

Comments (

0

)